திருப்புகழ் : இருவினைப் பிறவி
திருத்தலம் : திருப்பாண்டிக்கொடுமுடி
சந்தம்
தனதனத் தனனத் - தனதான
வரிகள்
இருவினைப் பிறவிக் - கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் - புகுதாதே
திருவருட் கருணைப் - ப்ரபையாலே
திரமெனக் கதியைப் - பெறுவேனோ
அரியயற் கறிதற் - கரியானே
அடியவர்க் கெளியற் - புதநேயா
குருவெனச் சிவனுக் - கருள்போதா
கொடுமுடிக் குமரப் - பெருமாளே.
பதம் பிரித்தது
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற்கு அறிதற்கு அரியானே
அடியவர்க்கு எளிய அற்புதநேயா
குருவெனச் சிவனுக்கு அருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.
பொருளுரை
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, கொடுமுடித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!