Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பாண மலரது

திருத்தலம் : திருவருணை

சந்தம்

தான தனதன தத்தம் - தனதான

வரிகள்

பாண மலரது தைக்கும் - படியாலே

பாவி யிளமதி கக்குங் - கனலாலே

நாண மழிய வுரைக்குங் - குயிலாலே

நானு மயலி லிளைக்குந் - தரமோதான்

சேணி லரிவை யணைக்குந் - திருமார்பா

தேவர் மகுட மணக்குங் - கழல்வீரா

காண அருணையில் நிற்குங் - கதிர்வேலா

காலன் முதுகை விரிக்கும் - பெருமாளே.

பதம் பிரித்தது

பாண மலர் அது தைக்கும் படியாலே

பாவி இள மதி கக்கும் கனலாலே

நாணம் அழிய உரைக்கும் குயிலாலே

நானும் மயலில் இளைக்கும் தரமோ தான்

சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா

தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா

காண அருணையில் நிற்கும் கதிர்வேலா

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.

பொருளுரை

மன்மதனது மலர்ப் பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும், பாவி இளம் பிறை வீசுகின்ற நெருப்பாலும், (என்) மானத்தைக் கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும், நானும் காம மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்? விண்ணுலகத்தில் இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய மார்பனே, தேவர்கள் அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும் திருக் கழலை உடைய வீரனே, யாவரும் காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே, யமனுடைய முதுகு விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்