திருப்புகழ் : நாடித் தேடி
திருத்தலம் : திருவானைக்கா
சந்தம்
தானத் தானத் - தனதான
தானத் தானத் - தனதான
வரிகள்
நாடித் தேடித் - தொழுவார்பால்
நானத் தாகத் - திரிவேனோ
மாடக் கூடற் - பதிஞான
வாழ்வைச் சேரத் - தருவாயே
பாடற் காதற் - புரிவோனே
பாலைத் தேனொத் - தருள்வோனே
ஆடற் றோகைக் - கினியோனே
ஆனைக் காவிற் - பெருமாளே.
பதம் பிரித்தது
நாடித் தேடித் தொழுவார்பால்
நான் நத்தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதி ஞான
வாழ்வைச் சேர தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத்து அருள்வோனே
ஆடற் றோகைக்கு இனியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.
பொருளுரை
உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம் நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ? நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள (துவாதசாந்த நிலையில் கூடும்) ஞானவாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே, பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே, நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே, திருவானைக்கா தலத்தின் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!